Tamilசெய்திகள்

நாளை காலாண்டு தேர்வு தொடங்குகிறது – பொதுவான வினாத்தாள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது

தமிழக அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நாளை தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

முன்னதாக கடந்த 15-ந்தேதி 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த வினாத்தாள் முறையால் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் வேறுபாடு ஏற்படுகிறது.

அதனால் அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியான வினாத்தாள்களை பின்பற்றி தேர்வு எழுதினால் ஏற்றத்தாழ்வு ஏற்படாது என்று கருதி மீண்டும் பொதுவான வினாத்தாள் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு உள்ளது. அரசு தேர்வுத்துறையால் தயாரிக்கப்படும் இந்த வினாத்தாள்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்து தேர்வு நாளில் வினியோகிக்க வேண்டும்.

தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள், தொடர்புடைய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்ச ரிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நாளை நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு பொதுவான வினாத்தாள் முறையில் தேர்வு நடைபெறுகிறது.

ஏற்கனவே இருந்த இந்த தேர்வு முறையால் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. தற்போது அதுபோன்ற தவறுகள் எதுவும் எங்கும் நடைபெறாமல் மிகுந்த கவனத்துடன் வினாத்தாள்களை கையாள வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.