Tamilசெய்திகள்

சிறையில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் மனு – ஆந்திர அரசியலில் பரபரப்பு

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண், பிரபல சினிமா நடிகரும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவை ஜெயிலில் சந்தித்தனர்.

இந்நிலையில் ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் சிறைத்துறை அதிகாரிகளிலும் அனுமதி கேட்டு மனு அளித்து உள்ளார். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாளை ஆந்திரா சென்று ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆந்திராவின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என பேசினார். இதேபோல் சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்ட பிறகு அவரது மகன் லோகேஷுக்கு போன் செய்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். இதற்கு அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்தார். ரோஜாவுக்கு தெலுங்குதேசம் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாளை சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கும் நிகழ்வு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அவரது மனைவி புவனேஸ்வரி நேற்று காலை ஜெயிலுக்கு சென்றார். அதிகாரிகள் கணவரை சந்திக்க அவருக்கு அனுமதி மறுத்தனர்.

வாரத்தில் 3 நாட்கள் மனைவி கணவரை சந்திக்கலாம் என விதி உள்ளது. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் வேண்டும் என்று எனக்கு அனுமதி மறுத்தனர் என புவனேஸ்வரி தெரிவித்தார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஐ.டி. ஊழியர்கள் சந்திரபாபு நாயுடுவை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கல்லூரி மாணவர்களும் சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.