கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திராவிற்கு வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படுகிறது
ஆந்திரா மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து தினமும் 60க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் ஆந்திராவிற்கு இயக்கப்படுகிறது. அதே போல் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட ஆந்திர அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தென்மாவட்டங்களிலிருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு கிருஷ்ணகிரி வழியாக செல்வது வழக்கம். அதே போல் ஓசூரில் பணிபுரியும் ஆந்திரா மாநில தொழிலாளர்கள் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை சென்று வருவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது. திருப்பதி செல்லும் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் ஆந்திராவில் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் ஆந்திரா பஸ்கள் ஓசூர், கிருஷ்ணகிரிக்கு பயணிகளை ஏற்றி செல்ல வந்தது. அதே போல் தமிழக பஸ்களும் ஆந்திரா மாநிலத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றன. இதனால் வழக்கம் போல் நேற்று காலை முதல் ஆந்திரா மாநிலத்திற்கு பஸ்கள் சென்று வந்தன.