புதுப்பள்ளி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சாண்டி உம்மன் இன்று எம்.எல்.ஏவாக பதிவி ஏற்கிறார்
கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி இறந்ததையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 5-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட உம்மன்சாண்டியின் மகனான சாண்டி உம்மன் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமசை 37ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
53 ஆண்டுகளாக புதுப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வாக உம்மன்சாண்டி இருந்தார். இந்நிலையில் தற்போது நடந்த இடைத் தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றிருக்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சாண்டி உம்மன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். முன்னதாக அவர் இன்று காலை சட்டசபை சபாநாயகர் ஷம்சீரை சந்தித்தார்.