Tamilசெய்திகள்

அறிவில்லாத பா.ஜனதாவினர் என்னுடைய பேச்சை திரித்து பேசுகிறார்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லையில் நடைபெற்ற விழாவில் பேசும்போது கூறியதாவது:-

நான் சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசினேன். அது ஒருநாள் செய்தியாக போயிருக்கும். ஆனால், அந்த செய்தியை எடுத்து பொய் செய்தியாக பரப்பி, தற்போது ஒட்டு மொத்த இந்தியாவும் அதைப்பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது. சனாதனம் என்றால் என்ன?. எதுவுமே நிலையானது. எதுவுமே மாற்றக் கூடாது. எதையும் கேள்வி கேட்டக் கூடாது என்பதுதான் சனாதனம். இதை நான் சொல்லவில்லை. அவர்கள் சொல்வது. எல்லாவற்றையும் மாற்றிக் காண்பிப்போம், எல்லாவற்றையும் கேள்வி கேட்போம் என ஆரம்பிக்கப்பட்டது தான் திராவிட முன்னேற்ற கழகம்.

அம்பேத்கர் சொன்னதைத்தான் நான் சொன்னேன். தந்தை பெரியார் எதற்காக போராடினாரோ, அதைத்தான் நான் பேசினேன். தி.மு.க. எதற்காக தொடங்கப்பட்டதோ, அதற்காகத்தான் நான் குரல் கொடுத்தேன். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறினேன். ஆனால், இனப்படுகொலை செய்யச் சொன்னதாக பொய்ச் செய்தியை பா.ஜனதாவினர் பரப்பி விட்டனர்.

மோடி வறுமையை ஒழிப்பேன் என்ற பொய் கூறினாரே?. வறுமையை ஒழிப்பது என்றால் ஊரில் உள்ள பணக்காரர்களை கொலை செய்வதா?. சமீபத்தில் சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. திராவிட ஒழிப்பு என்றால், திமுக-வினரை அழைத்து கொலை செய்வதா?.

அறிவில்லாத பா.ஜனதாவினர் என்னுடைய பேச்சை திரித்து, அமித்ஷா, நட்டா என பேசாத ஆளே கிடையாது. இதற்கு மேல் நான் பேசப்போவதில்லை. நீங்கள் பேச வேண்டும். தமிழ்நாடு மக்கள் பேச வேண்டும். கொள்கைகளை பேசக்கூடிய கூட்டம் என்பதை இளைஞரணி நிரூபித்து காட்ட வேண்டும். சனாதனம் ஒழியும் வரை என்னுடைய குரல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

என்னுடைய தலைக்கு 10 கோடி ரூபாய் விலை விதித்த சாமியாருக்கு 500 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் உண்மையான சாமியார் இல்லை. பொய் சாமியார். இந்த போலி சாமியார்களை அடித்து விரட்டுவதற்காகத்தான் இந்த சனாதன ஒழிப்பு கூட்டம். எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள். நீங்கள் போதாதா? (இளைஞரணி தொண்டர்களை பார்த்து கை காண்பித்தார்). அவர்களின் 9 வருட ஆட்சி காலத்தில் செய்தது ஏதும் கிடையாது. பேசுவதற்கு ஒன்னும் கிடையாது. முழுக்க முழுக்க கலவரத்தை தூண்டி விடுவது.

இவ்வாறு தெரிவித்தார்.