கச்சத்தீவு மீட்பு மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவுக்கு உட்பட்டது – வழக்கை முடித்து வைத்த மதுரை உயர் நீதிமன்றம்
சென்னையை சேர்ந்த பீட்டர்ராயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கச்சத்தீவு ராமேசுவரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின்னர் இந்தியா- இலங்கை நாடுகள் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையில், பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த 1983-ம் வருடம் முதல் 2005-ம் ஆண்டு வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது வரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை தமிழக மீனவர்கள் இழந்துள்ளனர்.
2013-ம் ஆண்டு மட்டும் 111 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 19.6.2023 அன்று 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 21.6.2023 அன்று 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதாவது, 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையை இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர். எனவே, அந்த உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் என மத்திய அரசு வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவுக்கு உட்பட்டது. இதில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.