சத்துணவு கூடத்தில் சிமெண்ட் காரைகள் இடிந்து விழுந்து ஊழியர் படுகாயம்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் சன்னியாசி பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் சத்துணவு கூடம் இருந்து வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 55) என்பவர் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை சத்துணவு கூடத்தில் ஊழியர் சாந்தி மாணவர்களுக்கு சமைத்துக் கொண்டு இருந்தார். அப்போது கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து சாந்தி தலையில் விழுந்தது. அப்போது சாந்தி கதறி துடித்தார். இந்த சத்தம் கேட்ட ஆசிரியர்கள் சத்துணவு கூட்டத்திற்கு சென்று பார்த்தபோது சாந்தி துடிதுடித்துக் கொண்டிருந்தார். அவரை உடனடியாக மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் அந்த நேரத்தில் யாரும் உள்ளே செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சத்துணவு கூடத்தை உடனடியாக இடித்து புதிய சத்துணவு கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.