Tamilசெய்திகள்

என் பிறந்தநாள் பரிசாக என்னுடைய ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கிண்டல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலத்தில், சுரங்க ஊழல், மதுபான ஊழல், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதிய முறைகேடு, ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் ஆகிய ஊழல்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த 2 நாளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர், துர்க் ஆகிய நகரங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வந்தது. இதற்கிடையே, நேற்று முதல் மந்திரி பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா, பூபேஷ் பாகலின் சிறப்பு அதிகாரி ஆகியோரது ராய்ப்பூர் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

துர்க் நகரில் ஒரு தொழிலதிபரின் வீட்டிலும் சோதனை நடந்தது. வினோத் வர்மா வீட்டில் நடந்த சோதனையின்போது, பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர். எந்த வழக்குக்காக இச்சோதனை நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடப்பதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல் மந்திரி பூபேஷ் பாகல் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா அவர்களே, எனது பிறந்தநாளில், என் அரசியல் ஆலோசகர் மற்றும் சிறப்பு அதிகாரி வீடுகளுக்கு அமலாக்கத் துறையை அனுப்பி எனக்கு விலைமதிப்பில்லாத பரிசு அளித்து இருக்கிறீர்கள். ராய்ப்பூரில் எங்கள் கட்சியின் தேசிய அமர்வு நடைபெற்ற போது அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தப்பட்டன. எனது பிறந்தநாளான இன்றும் சோதனை நடத்தப்படுகிறது.

அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை துணை கொண்டு பா.ஜ.க. தேர்தலில் போட்டியிடுகிறது. நிரந்தரமாக ஆட்சியில் இருப்போம் என்று பாஜக நினைக்கக் கூடாது. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இப்படியே குறிவைத்துக் கொண்டே இருந்தால் இந்த முறை 15 சீட் கூட கிடைக்காது என தெரிவித்தார்.