Tamilசெய்திகள்

30 ஆயிரம் அட்டைதாரர்களை நீக்கிய ஆவின் நிர்வாகம் – தவறான தகவல் கொடுத்து ஏமாற்றியதால் நடவடிக்கை

சென்னையில் தினமும் 15 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 4.5 லட்சம் லிட்டர் பால் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. 9 லட்சம் பால் அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள். ஒரு குடும்பத்துக்கு 1 லிட்டர் பால் இந்த அட்டை மூலம் விநியோகிக்கப்படும்.

நீலம், பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அட்டைகள் மூலம் அதிகம் விற்பனையாகிறது. ஆரஞ்சு நிற பாக்கெட் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவு. பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு பால் பாக்கெட் கடைகளில் அரை லிட்டர் ரூ.30-க்கு விற்கப்படுகிறது. பால் அட்டைதாரர்களுக்கு ரூ.23-க்கு வழங்கப்படுகிறது. இந்த பாக்கெட்டை வாங்கினால் லிட்டருக்கு 14 ரூபாய் மிச்சமாகிறது.

இதனால் சிலர் தவறான முகவரி, ஆவணங்களை கொடுத்து ஆரஞ்சு பால் பாக்கெட்டுகளை வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து லாபம் பார்த்து வந்தனர். இதன் காரணமாக ஆவின் நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. இந்த முறைகேட்டை தடுக்க ஆவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பால் அட்டைதாரர்களை நேரில் அழைத்து ஆய்வு செய்தனர். ரேஷன் கார்டு, மின்சார கட்டண ரசீது, வாடகை வீடு ஒப்பந்தம் போன்றவற்றை ஆய்வு செய்ததில் சிலர் தவறான ஆவணங்களை கொடுத்து பால் அட்டையை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. கடந்த 2 மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வவில் 30 ஆயிரம் பால் அட்டைகள் தவறுதலாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அட்டைகளை ரத்து செய்யப்பட்டது.

தினமும் 15 ஆயிரம் லிட்டர் ஆரஞ்சு நிற ஆவின் பால் வணிக பயன்பாட்டிற்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஆவினுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆவின் பால் அட்டையை ஆன்லைன் மூலம் புதுப்பித்து கொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. புதியதாக அட்டை தேவைப்படுபவர்களும் வீட்டில் இருந்தபடியே இணையதளம் வழியாக பதிவு செய்யலாம்.

ஆன்லைன் வழியாக பால் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வீட்டிற்கே தபாலில் அனுப்பி வைக்கப்படும். இதற்காக கூடுதலாக ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தபால் மூலம் வாங்க விரும்பாதவர்கள் மண்டல அலுவலகத்திலும், பால் டெப்போக்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரி தெரிவித்தார்.