சென்னை வழியாக புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க திட்டம்
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரிக்கு ரெயில் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் புதுவை ரெயில்நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரி ரெயில்நிலையம் அழகுற மேம்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் வந்தே பாரத் சிறப்பு அதிவேக ரெயில்களை மத்திய ரெயில்வே துறை இயக்கி வருகிறது.
இந்த பட்டியலில் தற்போது புதுவையும் இடம்பெற்றுள்ளது. புதுவையிலிருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை திருப்பதி இடையிலான 340 கிமீ தூரத்துக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
புதுவை, சென்னை, திருப்பதி ஆகிய 3 நகரங்களை இந்த ரெயில் இணைக்கும். இந்த ரெயில் புதுவை, விழுப்புரம் சந்திப்பு, மதுராந்தகம், சென்னை சென்ட்ரல், அரக்கோணம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். புதுவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில்சேவை வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.