12 அணிகள் விளையாடும் புச்சிபாபு கோப்பை கிரிக்கெட் போட்டி 15 ஆம் தேதி தொடங்குகிறது
‘தென்இந்திய கிரிக்கெட்டின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட மறைந்த புச்சிபாபு நினைவாக அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) வருகிற 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ந்தேதி வரை நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானம் தயார்படுத்தப்பட்டு வருவதால் முதல் முறையாக புச்சி பாபு கிரிக்கெட் சென்னைக்கு வெளியே நடத்தப்படுகிறது. 6 ஆண்டுக்கு பிறகு திரும்பும் இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், இந்தியன் ரெயில்வே, திரிபுரா, ‘பி’ பிரிவில் அரியானா, பரோடா, மத்திய பிரதேசம், ‘சி’ பிரிவில் மும்பை, டெல்லி, ஜம்மு-காஷ்மீர், ‘டி’ பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் கேரளா, பெங்கால் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 4 பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கும் தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- இந்தியன் ரெயில்வே (இடம்: கோவை), அரியானா-பரோடா (நத்தம்), மும்பை-டெல்லி (சேலம்), தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன்- கேரளா (நெல்லை) ஆகிய அணிகள் மோதுகின்றன.
இறுதிப்போட்டி கோவையில் (செப்.8-11) அரங்கேறுகிறது. இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.3 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சமும், ஆட்டநாயகனுக்கு ரூ.10 ஆயிரமும், தொடர்நாயகனுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ. பழனி சென்னையில் நேற்று தெரிவித்தார். அப்போது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, பொருளாளர் ஸ்ரீனிவாசராஜ், உதவி செயலாளர் டாக்டர் பாபா, சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.