தொடர் விடுமுறையால் வெளியூர் செல்லும் மக்கள் – தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் 30 சதவீதம் உயர்ந்தது
பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் பஸ், ரெயில்களில் இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. அதுமட்டுமல்லாமல் தொடர் விடுமுறை நாட்கள் வந்தாலும் வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் கூட்டம் அதிகரிக்கிறது.
கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு சிறப்பு பஸ்களை இயக்கினாலும் கூட தனியார் ஆம்னி பஸ்களில் கூட்டம் குறையவில்லை. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 2-வது சனிக்கிழமை நாளை விடுமுறையாகும். அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் (13-ந் தேதி), 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழாவையொட்டி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
14-ந்தேதி திங்கட்கிழமை மட்டும் வேலைநாளாக இருப்பதால் வெளியூர் செல்ல கூடியவர்கள் அன்று விடுப்பு கொடுத்து விட்டு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையை கழிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களில் சென்றாலும் பஸ், ரெயில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்து உள்ளனர்.
தொடர் விடுமுறையையொட்டி விடப்பட்ட சிறப்பு ரெயில்களும் நிரம்பி விட்டன. வழக்கமாக இயக்கப்படும் தென் மாவட்ட ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 300ஐ தாண்டி உள்ளன. வெளியூர் செல்லக் கூடியவர்கள் இன்று பயணத்தை தொடங்குகிறார்கள். சென்ட்ரல், எழும்பூர், ரெயில் நிலையங்களில் இருந்து சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
அரசு பஸ்களில் பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து காத்து இருக்கிறார்கள். அனைத்து அரசு விரைவு பஸ்களும் நிரம்பி விட்டன. கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக இயக்கக் கூடிய 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 400 பஸ்கள் இன்று இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மதுரை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, தென்காசி, திருப்பூர், கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், ஓசூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை (சனிக்கிழமை)யும் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதலாக பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.
இதே போல் தாம்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இருந்தும் 100 சிறப்பு பஸ்கள் இன்று விடப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு பஸ்களில் 4 நாட்களும் பயணம் செய்ய அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதே போல் 15-ந்தேதி அன்று நெல்லை, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி பகுதியில் இருந்து சென்னை திரும்புவதற்கு முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.
ஆம்னி பஸ்களிலும் பயணம் செய்ய கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் பெரும்பாலான ஆம்னி பஸ்கள் நிரம்பி விட்டன. கோவை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்கள் 90 சதவீதம் நிரம்பி விட்டன. இன்று பயணம் செய்வதற்கு இடங்கள் கிடைக்கவில்லை.
ஒருசில பஸ்களில் மட்டுமே சில இடங்கள் காலியாக உள்ளன. தேவை அதிகரித்து வருவதால் தீபாவளி, பொங்கல் பண்டிகையை போல கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தினர். ஏ.சி. பஸ்களில் உட்கார்ந்து பயணம் செய்யவே ரூ.2000 வரை வசூலிக்கிறார்கள். மதுரை, திருநெல்வேலிக்கு படுக்கை வசதி ரூ.3000 முதல் ரூ.4000 வரை வசூலிக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் பொதுவாக வெளியூர் பயணம் குறைவாக இருக்கும் என்பதால் கட்டணத்தை குறைத்து விடுவார்கள். ஆனால் தற்போது தொடர் விடுமுறை வருவதால் அதை பயன்படுத்தி டிக்கெட் கட்டணத்தை கூட்டி விட்டனர்.
கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து இன்றும், நாளையும் பெரும்பாலான பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டதால் கட்டணத்தை மேலும் உயர்த்தி வருகின்றனர். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களிலும் கட்டணம் அதிகரித்து உள்ளது. பொதுமக்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் தனியார் ஆம்னி பஸ்களின் செயல்பாட்டை அரசு கட்டுப்படுத்தவில்லை என்ற ஆதங்கம் பயணிகள் மத்தியில் உள்ளது. கட்டணத்தை இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட்டு முன்பதிவு செய்வதை ஏன் போக்குவரத்து துறையால் தடுக்க முடியவில்லை. ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் இது போன்ற நிலை நீடித்து வருவதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காதா? என கேள்வி எழுப்புகின்றனர்.
ஒரு தனிநபர் சொந்த ஊர் சென்று வர ரூ.5000, 6000 வரை செலவிடும் நிலையில் குடும்பமாக எப்படி போக முடியும். ஏழை, நடுத்தர மக்கள் ஆம்னி பஸ் பயணத்தை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு கட்டணம் அதிகமாக உள்ளது என மனம் குமுறுகின்றனர்.