Tamilசெய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கேன்சர் நோய்க்கான புதிய எந்திரம் – ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று புதுவை வந்தார். காலை 9.55 மணிக்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 10.35 மணிக்கு புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரவேற்றனர்.

அங்கிருந்து காரில் புறப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தார். அங்கு ரூ.17 கோடியில் புதிதாக வாங்கப்பட்டுள்ள புற்றுநோய்க்கான நவீன கதிர் வீச்சு சிகிச்சை எந்திரத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவிலேயே வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையையும் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

இதையடுத்து மதியம் 12.45 மணிக்கு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகைக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு தங்கி ஓய்வெடுத்தார். இன்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று ஜனாதிபதி சாமி தரிசனம் செய்கிறார். மாலை 4.40 மணிக்கு முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு சென்று கலைநிகழ்வுகளை பார்க்கிறார்.

மாலை 5.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருக்காஞ்சி கஞ்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். 6.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் விடுதிக்கு வந்து ஓய்வெடுக்கிறார். இரவு 8 மணிக்கு கவர்னர் மாளிகையில் ஜனாதிபதிக்கு பாரம்பரிய இரவு விருந்து அளிக்கப்படுகிறது.

பின்னர் மீண்டும் விடுதிக்கு திரும்பி ஓய்வெடுக்கும் அவர் நாளை (செவ்வாய்கிழமை) காலை 6 முதல் 6.45 மணி வரை கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்கிறார். அவர் அமரும் வகையில் கல் மேடைகள் சிவப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளன. ஜனாதிபதி கடற்கரைப் பகுதிக்கு வருவதால் காலை 4 முதல் 7 வரை தினமும் வழக்கமாக நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை 9.15 முதல் 9.45 மணி வரை புதுவையின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கிறார். 10.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அரவிந்தர் ஆசிரமம் சென்று தியானம் செய்கிறார். அங்கிருந்து 11.15 மணிக்கு காரில் ஆரோவில் மாத்ரி மந்திருக்கு சென்று பார்வையிடுகிறார். அங்கேயே மதிய உணவை முடித்துவிட்டு 2.45 முதல் 4 மணி வரை நடைபெறும் ஆரோவில் கண்காட்சி, கருத்தரங்கில் பங்கேற்கிறார்.

பின்னர் 4 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காரில் லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 4.25 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி புதுவை வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 750 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 250 போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை ஆவடி, நெய்வேலியில் இருந்து 200 துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதுவை விமான நிலையம், ஜிப்மர், ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.