Tamilவிளையாட்டு

தாமதமாக பந்து வீசியதால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் டெஸ்ட் புள்ளிகள் குறைப்பு

சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றிகளைப் பெற்றதால், அத்தொடர் சமனில் முடிந்தது. இந்நிலையில், ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அபராதத் தொகை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அபராதப் புள்ளிகளை ஐசிசி விதித்துள்ளது.

இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி தாமதமாக பந்து வீசியதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் டெஸ்டில் 2 ஓவர்களையும், இரண்டாவது டெஸ்டில் 9 ஓவர்களையும், மூன்றாவது டெஸ்டில் 3 ஓவர்களையும், ஐந்தாவது டெஸ்டில் 5 ஓவர்களையும் இங்கிலாந்து குறைவாக வீசியது. இதற்காக ஒரு ஓவருக்கு ஒரு அபராதப் புள்ளி வீதம் அந்த அணிக்கு 19 அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆஷஸ் தொடரில் 2 வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 28 புள்ளிகளை இங்கிலாந்து பெற்றது. 19 அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டதால் வெறும் 9 புள்ளிகளை மட்டுமே பெற்ற இங்கிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு இறங்கியது. இதேபோல், 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. 10 ஓவர்கள் குறைவாக வீசியதால் அந்த அணிக்கு 10 அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 3-வது இடத்தில் உள்ளது. மேலும், தாமதமாக வீசிய ஒவ்வொரு ஓவருக்கும் ஆட்ட ஊதியத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு நான்காவது டெஸ்ட்டுக்கான ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட்டுகளுக்கு ஐசிசி முறையே 10, 45, 15 மற்றும் 25 சதவீதத் தொகை அபராதம் விதித்துள்ளது.