இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் – பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் 18 பேர் வேட்பு மனு தாக்கல்
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் வருகிற 12-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. நாளை வேட்பு மனு பரிசீலனையும், 7-ந்தேதி இறுதிவேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.
12 ஆண்டுகள் மல்யுத்த சம்மேளன தலைவராக நீடித்த பா.ஜ.க. எம்பி. பிரிஜ் பூஷன் சரண் சிங், தேசிய விளையாட்டு கொள்கையின்படி இந்த தேர்தலில் போட்டியிட முடியாது. அது மட்டுமின்றி சில மல்யுத்த வீராங்கனைகள் அவர் மீது பாலியல் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சர்ச்சை எதிரொலியாக மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட பணிகளில் இருந்து ஏற்கனவே ஒதுங்கி விட்டார். ஆனாலும் தனது விசுவாசிகள் மூலம் முக்கிய பதவிகளை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறார். 25 மாநில மல்யுத்த சங்கங்களில் 22 சங்கங்கள் தங்கள் பக்கம் இருப்பதாக ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். தலைவர், துணைத் தலைவர்கள், பொருளாளர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் மொத்தம் 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அவரது ஆதரவாளர் சஞ்சய் குமார் சிங் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் பிரிஜ் பூஷன், தனது குடும்பத்தில் இருந்து யாரும் மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தே்ாதலில் போட்டியிடமாட்டார்கள் என்று நேற்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவரது மகன் கரண் பிரதாப், மருமகன் விஷால் சிங் மாநில மல்யுத்த சங்கங்களில் பொறுப்புகளில் இருந்தாலும் அவர்கள் தேர்தல் களத்தில் இல்லை.