எதிர்கட்சிகளின் கூட்டணி பெயரை கிண்டல் செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மற்றும் கர்நாடகாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயரிட்டுள்ளது. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இந்தியா எனப் பெயர் வைத்துள்ளதற்கு விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் சிலரே இந்தியா என பெயர் வைத்ததற்கு அதிருப்தி தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
நேற்று பிரதமர் மோடி கிழக்கு இந்திய கம்பெனிகள், இந்தியன் முஜாஹிதீன் உள்ளிட்டவைகளிலும் இந்தியா உள்ளது. நாட்டின் பெயரை வைத்து மக்களை திசைதிருப்பி ஏமாற்றிவிட முடியாது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கிண்டல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வைத்துள்ள இந்தியா பெயர் குறித்து கூறுகையில் ”காகம் தனக்குத்தானே அன்னம் என பெயர் வைத்துக் கொண்டாலும், அதனால் முத்தை எடுக்க முடியாது. அமாவாசை பவுர்ணமி என பெயர் மாற்றப்பட்டாலும், அது முழுமையான வெளிச்சத்தை கொடுக்க முடியாது. அதேபோல்தான், பெயரை மாற்றினாலும், பிளவுபடுத்தும் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பார்வை முடிவுக்கு வராது.” என்றார்.
மேலும், உங்களுடைய பெயர் மாற்றம், உங்களுடைய விளையாட்டை (அரசியல் செயல்பாடு) மாற்றாது எனக் குறிப்பிட்டுள்ளார்.