சென்னையின் முக்கிய பகுதிகளில் பழுதடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் சிரமம்
சென்னையில் முக்கிய பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்தையே தடுமாற வைத்துள்ளது.
தொழில் நகரமான அம்பத்தூரில் ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் நிறைந்துள்ள போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி. இந்த பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க சாலைகளின் ஒரு பக்கம் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.
இன்னொரு பக்கத்தில் தனியார் கியாஸ் நிறுவனத்துக்கான குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நடைபெறும் இந்த பணிகளால் சாலைகள் குறுகி குண்டும் குழியுமாகிவிட்டன. சாலைகள் இருந்த இடமே தெரியாமல் செம்மண் பகுதியாக காட்சி அளிக்கிறது.
கள்ளிக்குப்பம், கடப்பா சாலை, மதனங்குப்பம் சாலை, கருக்கு சாலை, பட்டரைவாக்கம் சாலை, கொரட்டூர் சாலை, தொழிற்பேட்டை – திருவேற்காடு சாலை ஆகிய சாலைகள் படுமோசமாக காட்சி அளிக்கின்றன. லேசான தூறல் விழுந்தாலே இந்த பகுதி சேறும் சகதியுமாகி விடுகிறது.
இந்த வழியாக பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்களில் செல்பவர்கள் மழை நேரங்களில் பள்ளம் தெரியாமல் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.
கலெக்டர் நகர் சந்திப்பு, இளங்கோ நகர் சந்திப்பு, மங்கல் ஏரி பார்க் சந்திப்பு ஆகிய பகுதிகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக கிடக்கின்றன. இந்த பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பே மெட்ரோ வாட்டர் பணிகள் முடிந்தும் பள்ளங்களை மூடி தார் சாலைகள் அமைக்கவில்லை. சில இடங்களில் நிரப்புவதற்கு மண்கூட இல்லை.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, “ஓடை தோண்டும்போது ஒரு லாரி மண்ணை ரூ.2 ஆயிரம் விலைக்கு விற்று விடுகிறார்கள். இதில் அரசியல்வாதிகள் உடந்தையாக இருக்கிறார்கள். குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகும், கால்வாய் கரைகள் கட்டப்பட்ட பிறகும் மூடுவதற்கு போதுமான மண் கிடைப்பதில்லை. இதனால் அரை குறையாக மூடி போடுகிறார்கள். மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது” என்றார்கள்.
சில இடங்களில் பணிகள் முடிந்தும் சாலையை சீர மைக்கவில்லை. இவ்வளவு முக்கியமான பகுதியில் சாலைகளை மாதக்கணக்கில் இப்படி போட்டிருப்பது சரி தானா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
குறிப்பிட்ட அளவு தூரத்துக்கு பணிகள் முடிந்ததும் அந்த பகுதியில் சாலைகளை சீரமைத்து விட்டு அடுத்தக்கட்டமாக தொடரலாமே என்கிறார்கள் பொது மக்கள். திரு.வி.க.நகரில் இருந்து மூலக்கடை வரை மழைநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
கூவத்தில் கொண்டு இணைக்க பிருந்தா தியேட்டர் அருகே பணிகள் நடக்கிறது. மாதக்கணக்கில் நடக்கும் இந்த பணியால் அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கி உள்ளது. 5 நிமிடங்களில் திரு.வி.க. நகருக்கு செல்லக்கூடியவர்கள் சந்து பொந்துகளில் நுழைந்து நெரிசலில் சிக்கி படாதபாடு பட்டு சுமார் ஒரு மணி நேரமாகிறது. நெரிசல் மிகுந்த சாலையால், மாலை நேரங்களில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
கோடம்பாக்கம் ஆற்காடு சாலை மெட்ரோ ரெயில் பணிகளால் ஏற்கனவே மேடு பள்ளங்களாக கிடக்கிறது. இதற்கிடையில் உட்புற பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்டதால் பாத சாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். சுமார் 3 வருடங்களாக சிரமப்பட்டு வருவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
மெயின் ரோடு மட்டுமில்லாமல் உட்புற சாலைகளையும் குண்டும் குழியுமாக்கி பணிகளை முடிக்காமல் போட்டு இருப்பதால் குடியிருப்பு வாசிகள் தெருச்சாலைகள் வழியாக மெயின் ரோட்டுக்கு வர சிரமப்படுகிறார்கள். மெயின் ரோட்டிலும் மெட்ரோ பணிகள் நடப்பதால் போக்குவரத்து சுற்றி சுற்றி விடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த சிறு மழையில் கூட காந்தி ரோடு, முரளி கிருஷ்ணாநகர் மெயின் ரோடு முழுவதும் சகதி மற்றும் குளம்போல் ஆகிவிட்டதாக தெரிவித்தனர்.
சில சாலைகளின் நடு பகுதியிலேயே தோண்டி கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடப்பதால் அந்த பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் கூட செல்வது சிரமமாக இருப்பதாக கூறினார்கள். வளசரவாக்கம் பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதும் பெரும்பாலும் அனைத்து ரோடுகளிலும் மெட்ரோ வாட்டர், பாதாள சாக்கடை இணைப்புகளுக்காக ஓடைகள் தோண்டப்பட்டன. சில பகுதிகளில் பணிகள் முடிந்தும் முறையாக மூடப்படாததால் போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதாக கூறுகிறார்கள்.
பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலைகளின் நடுவே ராட்சத தூண்கள் அமைக்கப்படுவதால் போரூரில் இருந்து கோடம்பாக்கம், வடபழனி செல்லும் கனரக வாகனங்கள் அம்பேத்கர் சிலை, கே.கே.நநகர், வளசர வாக்கம் பகுதிகளில் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. அதேநேரம் வளசர வாக்கம், மேட்டுக்குப்பம், ஆழ்வார் திருநகர் பகுதிகளில் உட்புற சாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ள இரு சக்கர வாகனங்கள், கார்கள் அந்த பகுதிகளில் நடந்து வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பரங்கிமலை – மேடவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலையின் நடுவே தூண்கள் அமைக்கப்படுவதால் இரு பக்கமும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்காக குறுகிய பாதைகள் உள்ளன. இந்த பாதைகளை தார் போட்டு சீரமைத்து கொடுக்காததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள்.
மேடவாக்கம் கூட்டு ரோடு அருகில் சாலை இருந்த அடையாளமே இல்லாமல் செம்மண் பாதையாக குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்களில் சிக்குகிறார்கள். சோழிங்கநல்லூர், சிறுசேரி, துரைப்பாக்கம் பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பலர் இந்த வழிகளில் இரவு நேரத்தில் வருவது வழக்கம். ஒரு பக்கம் பணிகள் நடந்தாலும் இன்னொரு பக்கம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் சாலைகளை அமைத்து கொடுப்பது நல்லது.