இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடக்கிறது
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள ரோசவ்வில் இன்று (12-ந் தேதி) தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி மோசமாக தோற்று இருந்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதில் இருந்து மீண்டு இந்த தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3-வது வரிசையில் விளையாடும் புஜாரா இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் இடத்தில் இடம் பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் அபாரமாக ஆடிய ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அவர் தொடக்க வீரராக ஆடுவாரா? அல்லது 3-வது வரிசையில் களம் இறங்குவாரா? என்பது தெரியவில்லை. ரோகித் சர்மாவுடன் ஜெய்ஷ்வால் தொடக்க வரிசையில் ஆடினால் சுப்மன்கில் 3-வது வீரராக விளையாடுவார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்ரீகர் பரத் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இதனால் அவர் இடத்தில் இஷான் கிஷன் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்காதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த டெஸ்டில் அவர் ஜடேஜாவுடன் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்துவார். வேகப்பந்து வீரர்களான முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் முதன்மை பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள். 3-வது வேகப்பந்து வீரராக புதுமுகமான முகேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஜெய்தேவ் உனத்கட் அல்லது நவ்தீப் சைனி இடம் பெறுவர்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 4 டெஸ்டிலும் வெற்றி பெற்று இருந்தது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட்இண்டீசிடம் தோற்றது இல்லை. அதாவது கடைசியாக ஆடிய 23 டெஸ்டில் வெஸ்ட் இண்டீ சுக்கு எதிராக தோற்றது கிடையாது. இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 8 டெஸ்ட் தொடரையும் இந்தியாவே வென்று இருந்தது. இதனால் ரோகித்சர்மா தலைமையிலான அணி மிகுந்த நம்பிக்கையுடன் வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்ளும். பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த பிப்ரவரி, மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டிலும் தோற்று தொடரை இழந்தது. ஒரு காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்த அந்த அணி இன்று மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாட அந்த அணி கடுமையாக போராடும். இன்றைய டெஸ்ட் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.