டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்று நடப்பு ஆஷஸ் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்காக அபாரமாக ஆடிய ஹாரி புரூக் 75 ரன்கள் குவித்தார். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன ஹாரி புரூக் இந்த ஆட்டத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். இந்த ஆட்டத்தின் 75 ரன்கள் அடித்த அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை ஹாரி புரூக் படைத்துள்ளார். அவர் 1058 பந்துகளை எதிர்கொண்டு 1000 ரன்களை கடந்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் காலின் டி கிராண்ஹோம் (1140 பந்து), டிம் சவுதி (1167 பந்து), பென் டக்கட் (1168 பந்து) ஆகியோர் உள்ளனர்.