Tamilசெய்திகள்

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அவ்வப்போது தடை விதித்திருந்தாலும் தண்ணீர் குறையும்பொழுது குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தின் மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இன்று காலையும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள நீர் தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. குண்டாறு நீர் தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.