காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் – அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் சந்தித்து முறையிட்டனர். அப்போது, சுப்ரீம் கோர்ட்டு காவிரி ஆணைய உத்தரவுப்படி காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும். அங்கு அணை கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்கள். இதுதொடர்பான கோரிக்கை மனுவையும் மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 9 டி.எம்.சி. தண்ணீரை வழங்கவில்லை. மாத வாரியாக தமிழ்நாட்டிற்கான தண்ணீரை வழங்க, கர்நாடக அரசை அறிவுறுத்த கோரிக்கை விடுத்துள்ளோம். காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், டெல்டாவில் உள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம். தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது என தெரிவித்தார்.