மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு – காவிரி நீர் திறந்துவிட கோரி வலியுறுத்தல்
கர்நாடகாவுடன் காவிரி பிரச்சினை, தென்பெண்ணை ஆறு பிரச்சினை, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என தமிழகத்தின் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வே எட்டப்படாமல் சென்று கொண்டிருக்கின்றன.
காவிரியில் கர்நாடகம் நீர் திறப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்திருந்தாலும், மாதந்தோறும் வழங்கும் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை. அது மட்டுமின்றி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை தடுக்கும் நோக்கில் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் கர்நாடகா துணை முதல்-மந்திரி சிவக்குமார் அண்மையில் கூறுகையில் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கும் நேற்று முன்தினம் ஒருகடிதம் எழுதி இருந்தார். அதில் ஜூன், ஜூலை மாதத்துக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறைப்படி தரவில்லை. ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்திற்கு 34 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். இதை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனும், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு காவிரி ஆணைய உத்தரவுபடி காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார்கள்.
கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு அணை கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்கள். இது தொடர்பான கோரிக்கை மனுவையும் மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.