Tamilவிளையாட்டு

பெண்கள் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் – இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 473 ரன்களும், இங்கிலாந்து 463 ரன்களும் எடுத்தன. 10 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்திருந்தது.

போப் லிட்ச் பீல்ட், பெத் மூனி களத்தில் இருந்தனர். இதையடுத்து நேற்று முன் தினம் நடைபெற்ற 4-வது நாளில் ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சில் 78.5 ஓவர்களில் 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.

நேற்று முன் தினம் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 28 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டேனி வியாட் 20 ரன்னுடனும் கேட் கிராஸ் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 5-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய பெண்கள் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.