Tamilசெய்திகள்

டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி கொள்ளை – இருவர் கைது

டெல்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார்.

இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை அருகே இருந்து தனியார் நிறுவன வாடகை காரில் அவர் புறப்பட்டார். பிரகதி மைதான சுரங்கப்பாதை பகுதி அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரை 2 மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பின் தொடர்ந்தது.

கார் வளைவில் திரும்பும்போது அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களை முன்னாள் நிறுத்தி வழிமறித்தது. 2 மோட்டார் சைக்கிளிலும் 4 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். அதில் 2 பேர் காரை நெருங்கி அதில் இருந்த சஜன்குமார் மற்றும் டிரைவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணப்பையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. ரூ.2 லட்சம் பணம் கொள்ளை போய் இருந்தது பின்னர் தெரிய வந்தது. சுரங்கப் பாதையில் பொருத்தப்பட்டு இருந்த கேமிராவில் இந்த கொள்ளை சம்பவம் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக திலக் மார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்ற நபர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை சுற்றி வளைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனாவை ராஜினாமா செய்யக் கோரினார்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், “துணை நிலை ஆளுநர் பதவி விலக வேண்டும். டெல்லி மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒருவரை வழி செய்யுங்கள். மத்திய அரசால் டெல்லியை பாதுகாப்பாக மாற்ற முடியவில்லை என்றால், அதை எங்களிடம் ஒப்படையுங்கள். ஒரு நகரத்தை அதன் குடிமக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாக மாற்றுவது என்று நாங்கள் உங்களுக்கு காட்டுவோம்” என்று ட்வீட் செய்தார்.