டி.என்.பி.எல் கிரிக்கெட் – திண்டுக்கல்லை வீழ்த்தி கோவை வெற்றி
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது. சேலத்தில் நேற்று மாலை 3.15 மணிக்கு நடந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் அரை சதம் கடந்து 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகிலேஷ் 34 ரன்னில் அவுட்டானார். ஷாருக் கான் 18 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. கோவை அணி ஆரம்பம் முதல் துல்லியமாக பந்து வீசியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. திண்டுக்கல் அணியில் ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் வெளியேறினார். சரத் குமார் 36 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், திண்டுக்கல் அணி 147 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கோவை அணி சார்பில் தாமரை கண்ணன் 3 விக்கெட்டும், மணிமாறன் சித்தார்த், ஷாருக் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.