Tamilவிளையாட்டு

டி.என்.பி.எல் கிரிகெட் – திருச்சியை வீழ்த்தி கோவை வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி, லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பால்சி திருச்சி அணி துவக்கம் முதலே தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.

அக்சய் சீனிவாசன், மணிபாரதி, டேரில் பெராரியோ ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ, 58 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார்.

இதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜ்குமார் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்தார்.

திருச்சி அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது. கோவை கிங்ஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகளும், ஷாருக் கான் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக சுஜய் அரை சதம் அடித்து 72 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

தொடர்ந்து, அதீக் 13 ரன்களும், முகிலேஷ்- சுரேஷ் குமார் தலா 9 ரன்களும், சாய் சுதர்ஷன் 7 ரன்களும், ராம் அரவிந்த் 2 ரன்களும் எடுத்தனர். இந்த ஆட்டத்தின் முடிவில் 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து கோவை கிங்ஸ் அணி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.