Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 78 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பேர்ஸ்டோவ் 78 ரன்களும், சாக் கிராலி 61 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2ம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். கவாஜா 126 ரன்னும், அலெக்ஸ் கேரி 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அலெக்ஸ் கேரி 66 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கவாஜா 141 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், மொயீன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 7 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது.

ஜாக் கிராலி 7 ரன்னுடனும், பென் டக்கெட் 19 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணி 35 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.