டிஎன்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சி திருச்சி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணி 19.1 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திண்டுக்கல் அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்தனர்.
கங்கா ஸ்ரீதர் ராஜூ 41 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 48 ரன்கள் சேர்த்தார். ராஜ்குமார் 22 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார். திண்டுக்கல் சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின், சரவணக்குமார், சுபோத் பதி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விமல் குமார் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் அதிரடியாக ஆடினார். அவர் 30 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 46 ரன்கள் எடுத்தார்.
பாபா இந்திரஜித் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். சரத் குமார் 5 ரன்னில் வெளியேறினார். இறுதியில், திண்டுக்கல் அணி 14.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆதித்ய கணேஷ் 20 ரன்னும், சுபோத் பதி 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.