ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு மத்திர பிரதேச முதலமைச்சர் இரங்கல்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்தது. இரவு, பகல் பாராமல் மீட்பு பணி மேற்கொண்டனர். இந்நிலையில், சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட பெண் குழந்தை அங்கிருந்த ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆழ்துளை கிணற்றின் குழியில் விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மனம் அளவற்ற வேதனையும் துயரமும் நிறைந்துள்ளது. தொடர் மற்றும் அயராத முயற்சிகளுக்கப் பிறகும், சேஹூரில் உள்ள முங்காவாலியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த அப்பாவி சிறுமியை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்த துக்க நேரத்தில் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருடன் நாம் அனைவரும் இருக்கிறோம். சிறுமியின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினருக்கு இந்த இழப்பை தாங்கும் ஆற்றலையும் இறைவன் தர பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.