மெட்ராஸ் விமான நிலையம்
மனிதனின் பழங்கால ஆசைகளில் ஒன்று பறவைகள் போல வானில் பறக்க வேண்டும் என்பது.
இந்திய புராணங்களில் பெரும்பாலான கடவுள்களால் பறக்க முடியும். புஷ்பக விமானம் என்கிற ஒரு புராண பறக்கும் இயந்திரம் – செயற்கையாகப் பறக்கும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் நிபுணத்துவம் என அடிக்கடி முன் வைக்கப்படுகிறது. ஆனால், பறக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் தேர்ச்சி பெற்றபோது மெட்ராஸ் பின்தங்கியிருக்கவில்லை. ரைட் சகோதரர்கள் தங்கள் விமானத்தைப் பறக்கவிட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகு, மெட்ராஸ் அதன் வானத்தில் ஒரு விமானத்தைக் கண்டது.
நகரத்தின் விமானப் போக்குவரத்து வரலாறு 1910இல் தொடங்கியது. நகரத்தைச் சேர்ந்த கோர்சிகா தீவைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஜியாகோமோ டி ஏஞ்சலிஸ் ஒரு விமானத்தை உருவாக்கினார். ஜூலை 1909இல் ஆங்கிலக் கால்வாயை முதன்முதலில் பறந்து கடந்த பிரெஞ்சுக்காரரால் ஈர்க்கப்பட்ட டி’ஏஞ்சலிஸ், நகரத்தின் முன்னணித் தொழிலதிபரான சிம்ப்ஸனுடன் இணைந்து விமானத்தை உருவாக்கினார். இந்த விமானம் முழுக்க முழுக்க டி’ஏஞ்சலிஸின் சொந்த வடிவமைப்பு.