மின் மீட்டர் தடுப்பாட்டால் முடங்கிய கட்டுமான பணிகள்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின் மீட்டர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் பல கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளதாகவும், கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் மின்வாரியத்தில் மின்மீட்டருக்கு பதிவு செய்துள்ள பொதுமக்கள் தினசரி அலுவலகம் வந்து மின்மீட்டர் வந்துள்ளதா என கேட்டு கடந்த 2 மாதங்களாக ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் தாங்கள் ஆசை ஆசையாய் கட்டிய புதிய வீடுகளில் குடியேற முடியாமல் சோகத்துடன் மின்வாரிய அலுவலகத்தையே சுற்றி சுற்றி வருகின்றனர்.
இதனால் புதிய வீடு கட்டியவர்களும், புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபடுபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மின்சாரம் இருந்தால் தான் எந்த வேலையும் செய்ய முடியும் என்ற சூழல் நிலவி உள்ளது. புதிய கட்டுமான பணிகள் அனைத்தும் மின்மீட்டர் இல்லாததால் பாதியில் முடங்கி உள்ளன. இதனால் பொதுமக்கள் முதல் கட்டுமான தொழிலாளர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள சிலர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கான்கீரிட் பணிகள் முடிவடைந்த பின்னர் பூச்சுமான பணிகள் நடக்கும். அப்போது, கட்டிடத்திற்குள் இருட்டாக இருப்பதால் வேலை பார்ப்பதற்கு மின்விளக்கு தேவைப்படும். ஆனால் தற்போது மின்மீட்டர் தட்டுப்பாட்டால் இந்த பணிகள் அனைத்தும் முடங்குகிறது.
அவ்வாறு பணிகள் முடங்காமல் இருப்பதற்காக அருகில் உள்ள வீடுகளில் இருந்து மின்சாரம் எடுத்தால் மின்வாரியத்திலிருந்து வரும் அதிகாரிகள் மின்சாரம் கொடுத்து உதவு பவர்களுக்கும், எங்களுக்கும் பெருந்தொகையை அபராதம் விதிக்கின்றனர். இதனால் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருபவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.
இனிமேல் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த இருப்பதால் தற்போதைய மின்மீட்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே மின்சாரத்துறை அமைச்சர் மின்மீட்டர் தட்டுப்பாடுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில வீடுகளில் பழைய மின் மீட்டர் பழுது காரணமாக மின்வாரியத்தில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு புதிய மின் மீட்டர்கள் தட்டுப்பாடு காரணமாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த வீடுகளில் பழைய மின்தொகையை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.