சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 4 ராட்சத மின் விசிறிகள் அமைப்பு
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கோடை வெயிலையொட்டி பயணிகள் வசதிக்காக 4 ராட்சத மின் விசிறிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு இருந்து வட மாநிலங்கள் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இதனால், இரவு, பகல் எப்போதும் சென்ட்ரல் ரெயில் நிலையம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் ரெயில் நிலையங்களில் அலைமோதி வருகிறது. தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வருவதால் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர்.
கோடைவெப்பத்தையொட்டி ரெயில்வே நிர்வாகம் பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 4 ராட்சத மின் விசிறிகளை அமைத்து உள்ளது.இந்த மின்விசிறிகளால் ‘சிலுசிலு’ என காற்று வீசிவருகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஏற்கனவே அங்கு இருந்த சிறிய அளவிலான மின் விசிறிகளால் வெப்ப காற்று காரணமாக பயணிகள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட ராட்சத மின்விசிறிகளால் பயணிகள் இளைப்பாறி வருகின்றனர். பயணிகளின் சிரமத்தை போக்க உதவிய ரெயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள் பலர் நன்றி தெரிவித்து உள்ளனர்.