மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கும் நடிகர் அஜித்குமார்
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விடமுயற்சியின் கீழ் ‘முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாகவும், அஜித் நேபாள் மற்றும் பூட்டான் பைக் டூரை முடித்த பிறகு இதில் இணைவார் எனவும் கூறப்படுகிறது. மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை 70 நாட்கள் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் அஜித்தின் பகுதி 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய செய்தி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அதில், அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் இதற்காக மகிழ் திருமேனி இரண்டு கதாநாயகிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு வாலி, வில்லன் உள்ளிட்ட பல படங்களில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.