அம்மா உணவகங்களில் புதிய உனவு வகைகள் – மக்களிடம் கருத்து கேட்கும் மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலையில் இட்லி, மதியம் கலவை சாதம், இரவில் சப்பாத்தி என மலிவு விலையில் உணவுகள் விற்கப்படுகின்றன. அம்மா உணவகங்கள் தொடங்கியபோது இருந்த வரவேற்பு தற்போது குறைந்து வருகிறது.
எனவே அம்மா உணவகத்தில் உணவில் மாற்றம் தேவையா என்ற வகையில் பொதுமக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2.13 லட்சம் பேர் தங்களது கருத்தை தெரிவித்து உள்ளனர். இதில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மதிய உணவு வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதற்கு ஏற்ப அம்மா உணவகங்களில் உணவில் மாற்றம் செய்யப்பட்ட புதிய வகை உணவுகள் வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
அம்மா உணவகங்களில் உணவு வகைகளை ருசியாக தரவேண்டும் என்ற கருத்தை பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். காலையில் இட்லியுடன் கூடுதலாக சட்னி, வடை தர வேண்டும் என்கின்றனர். மதியம் வெள்ளை சாதம், ரசம், அப்பளம் அல்லது வடை, ஊறுகாய் வழங்க வேண்டும் என்கிறார்கள்.
இரவில் சப்பாத்தி மட்டுமின்றி இட்லி போன்றவற்றையும் வழங்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். கலவை சாதத்துக்கு மாற்றாக தனிச்சுவை கொண்ட சாத வகைகளை வழங்கலாம் என்றும் கூறினர்.
பொதுமக்களின் கருத்தின் படியே இவற்றை வழங்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம். கலவை சாதம் இல்லாத ஒருவேளை உணவு வகைக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை செலவிட பலர் தயாராக உள்ளனர். ஒரே விதமான உணவுக்கு பதிலாக சில மாற்றங்களை செய்து வழங்கும் நிலையில் பொதுமக்கள் ஓரிரு ரூபாய் கூடுதலாக கொடுக்கவும் தயாராக உள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழக அரசின் முடிவை பொறுத்து அம்மா உணவங்களின் உணவு வகைகளிலும், விலையிலும் மாற்றம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.