Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் 2023 – சென்னை, மும்பை அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஆட்டத்தில் 5 வெற்றி, 4 தோல்வி பெற்று உள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. அந்த அணி 6-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. சென்னை அணி பேட்டிங்கில் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரகானே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில் ஜடேஜா, பதிரனா, ஆகாஷ்சிங், தீபக் சாகர், துஷார் தேஷ் பாண்டே, தீக்ஷனா ஆகியோர் உள்ளனர். ஆனால் சென்னை அணியின் பந்து வீச்சு முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாக உள்ளது. அதிக ரன்களை விட்டு கொடுப்பது பின்னடைவாக கருதப்படுகிறது. எனவே பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டும். இந்த சீசனில் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை நடப்பது 5-வது போட்டி ஆகும். முதல் ஆட்டத்தில் லக்னோவை 12 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது.

2-வது ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 3 ரன்கள் வித்தியாசத்திலும் 4-வது ஆட்டத்திலும் பஞ்சாப்பிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. ஏற்கனவே மும்பையுடன் மோதிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

மேலும் இன்றைய  ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொள்ள முடியும். எனவே வெற்றிக்காக சென்னை அணி போராடும். மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டத்தில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பாக இருக்கிறார். பந்து வீச்சில் பியூஸ் சாவ்லா, அர்ஷத்கான், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் உள்ளனர். மும்பை அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் 200-க்கு மேலான ரன் இலக்கை எட்டிபிடித்து அசத்தியுள்ளது. இதனால் அந்த அணி அதே உத்வேகத்துடன் களம் இறங்கும்.

மேலும் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். மேலும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது மும்பை அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்க உதவும். இதனால் மும்பை அணி 6-வது வெற்றிக்காக போராடும்.