ஐபிஎல் கிரிக்கெட் 2023 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதல்
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற வருகிறது. போட்டியின் 16-வது நாளான இன்று (சனிக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் டுபெலி சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதை தொடர்ந்து கொல்கத்தாவிடம் 81 ரன்னும், லக்னோவிடம் 1 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து டெல்லியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் பெங்களூர் அணி இருக்கிறது.
லக்னோவுக்கு எதிராக 212 ரன் குவித்தும் தோற்றதால் அந்த அணி அதிர்ச்சி அடைந்தது. அதில் இருந்து மீண்டு வர இன்று வெற்றி பெற போராடும். டெல்லி அணியின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அந்த அணி தான் மோதிய 4 ஆட்டத்திலும் (லக்னோ-50 ரன், குஜராத்-6 விக்கெட், ராஜஸ்தான்-57 ரன், மும்பை-6 விக்கெட்) தோற்றது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்றாவது டெல்லி அணி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் 2-வது போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-ஷிகார் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
லக்னோ அணி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. டெல்லி, ஐதராபாத், பெங்களூர் அணிகளை வென்று இருந்தது. சி.எஸ்.கே.விடம் தோற்றது. பஞ்சாப்பை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் லக்னோ அணி உள்ளது.
பஞ்சாப் அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தா, ராஜஸ்தானை தோற்கடித்தது. ஐதராபாத், குஜராத்திடம் தோற்றது. லக்னோவை வீழ்த்தி 3-வது வெற்றி பெறும் வேட்கையில் இருக்கிறது.