ராணி மேரி கல்லூரி
ஜமீன்தார்களின் வாரிசுகளுக்குக் கல்வி கற்பிக்கப்படும் ‘நியூவிங்டன் பிரின்ஸ் பள்ளி’ தேனாம்பேட்டையில் இருந்தது. அதில் துணை முதல்வராக இருந்தவர் கிளமென்ட் டி லா ஹே. ஆங்கிலேயர்களின் விருப்பமான விளையாட்டான கிரிக்கெட்டை கிளெமென்ட் நன்றாக விளையாடக்கூடியவர் என்பதால், மெட்ராஸில் உள்ள வெள்ளையர் சமுதாயத்தில் அவர் மிகவும் பிரபலமாக இருந்தார். மெட்ராஸ் கவர்னர் பென்ட்லேண்ட் கூட அவருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவார். கிளமென்ட் தனது அழகான மனைவியுடன் மெட்ராஸின் பிரிட்டிஷ் சமூக நிகழ்வுகளில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்தார்.
ஐரோப்பாவிலிருந்து கிளமென்ட்டை பார்க்க வந்த அவரது சகோதரி டோரதி, மெட்ராஸின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுக்கும் அவருடன் சென்று வந்தபோது சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியொன்றில் மாகாண கவர்னருடன் அறிமுகம் கிடைத்தது.
டோரதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வாங்கி ஆசிரியைக்கான பயிற்சியும் பெற்றவர். அதை அறிந்த கவர்னர், மெட்ராஸில் பெண்களுக்கெனப் பிரத்தியேகமான கல்லூரியைத் தொடங்கத் திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.