மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி டெல்லி வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின.
முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ராகர் 26 ரன்கள் சேர்த்தார். இஸ்சி வாங்கி 23 ரன், அம்ஜோத் கவுர் 19 ரன் எடுத்தனர்.
இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 9 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. ஷபாலி வர்மா 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் மெக் லேனிங் (32 நாட் அவுட்), அலைஸ் கேப்சி (38 நாட் அவுட்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனர். இதனால் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்குத் தள்ளி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது. அத்துடன் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.