Tamilசெய்திகள்

ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிடவில்லை – அண்ணாமலை பேச்சு

மகளிர் தினத்தையொட்டி நேற்று கோவை சிட்ரா அரங்கில் ”பெண்மையை போற்றுவோம் – மாதர்களில் ஒற்றுமை மலரட்டும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது பெயருக்கு பின்னால் எம்.எல்.ஏ, எம்.பி. என்று போட நான் அரசியலுக்கு வரவில்லை. கட்சி வளர வேண்டும் என்பது தான் எனது இலக்கு. நேற்று நான் பேசிய எனது கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை. யாரும் போகாத பாதையில் பா.ஜ.க. பயணிக்கிறது. எங்களது பாதை தனித்தன்மையான பாதை. நான் இப்படி தான் இருப்பேன். நான் இருக்கும் வரை கட்சி இப்படி தான் இருக்கும்.

ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிடவில்லை. எல்லோருக்கும் தனித்தன்மை இருக்கிறது. அட்ஜெஸ்ட் செய்து நான் அரசியல் செய்ய மாட்டேன். அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் எந்த சங்கடமும், வருத்தமும் இல்லை. உரசலும், மோதலும் இல்லை. நாங்கள் யாருக்கும் சாமரம் வீச மாட்டோம்.

ஆயிரக்கணக்கானோர் தினமும் பா.ஜ.க.வில் இணைகிறார்கள். ஒரு கட்சியில் பலர் இணைவதும், விலகுவதும் சகஜம். எங்கள் கட்சிக்கு ஆயிரம் பேர் வந்தால், நூறு பேர் போகிறார்கள். தி.மு.க. அமைச்சர்கள் பலர் அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்கள்தான். ஒரு எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் சேரலாம்.

இடைத்தேர்தல் வரும் என்று கருதி அதனை விரும்பவில்லை. தி.மு.க. அமைச்சர்கள் தவறாக பேசுவது புதிதல்ல. பொன்முடி தொடர்ந்து அதைத் தான் பேசி வருகிறார். ஆன்லைன் ரம்மியை பா.ஜ.க எதிர்க்கிறது. கவர்னர் திருப்பி அனுப்பிய அந்த மசோதாவை சரி செய்து தர ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அண்ணாமலை மேடை ஏறும் போது ஒலி பெருக்கி பகுதியில் வைக்கப்பட்டு இருந்த அவரது புகைப்படத்தை பார்த்ததும், அதனை பெயர்த்து எடுத்து காவலரிடம் கொடுத்து விட்டு மேடை ஏறினார். இந்த சம்பவத்துக்கு மேடையில் பதில் அளித்த அண்ணாமலை, ”மகளிர் தின நிகழ்ச்சியில் எனது புகைப்படம் வேண்டாம் என்பதற்காக அதனை எடுத்தேன்” என்று தெரிவித்தார்.