Tamilசெய்திகள்

ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் அனுப்பினால் கடும் விளைகளை சந்திக்க நேரிடும் – சீனாவுக்கு ஜெர்மனி எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. சமீப ஆண்டுகளாக ஜெர்மனியுடன் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய அளவில் வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ளும் நாடாகவும் சீனா இருந்து வருகிறது.

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த மாத இறுதியில் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில், பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.
ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஜெர்மனி திகழ்கிறது என்று பிரதமர் மோடி பேசும்போது குறிப்பிட்டார்.

இந்தப் பயணத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளேன். இந்த முக்கிய விஷயத்தில் தனிப்பட்ட முறையில் நானே செயல்படுவேன் என அதிபர் ஸ்கால்ஸ் கூறினார். இதன்பின், நாடு திரும்பிய அவர் இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். இதில், வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபர் பைடனை நேரில் சந்தித்துப் பேசினார்.

சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகள், ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்க கூடும். ஆனால், அதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை சீனா வழங்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஆனால், சீனா அப்படி செய்யாமல் அதில் இருந்து விலகி இருக்கும் என்றே நான் நேர்மறையாக எண்ணுகிறேன் என அவர் கூறியுள்ளார்.

ஒருவேளை ரஷியாவுக்கு ஆயுதங்களை சீனா வழங்கினால் அந்நாடு மீது தடை விதிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதுபோன்று நடக்கக்கூடாது என நாங்கள் தெளிவுப்பட கூறி வருகிறோம். இந்த விவகாரத்தில் எங்களது கோரிக்கை வெற்றி பெறும் என்று நல்ல முறையிலேயே எண்ணுகிறேன். ஆனால், இந்த விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்தி, மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் சீனா அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.