Tamilசெய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகும் காலம் வரும் – அமைச்சர் துரைமுருகன் பேச்சு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

கருணாநிதி எப்படி இந்த இயக்கத்தை நடத்தினாரோ, அப்படியே இந்த இயக்கத்தை நடத்தக்கூடிய ஆற்றலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறார். அவர், ஆட்சியிலும், கட்சியிலும் ஆற்றுகிற பணி எல்லோரையும் வியக்க வைக்கிறது.

இந்தியாவில் இப்படிபட்ட ஒரு மாநிலம் இல்லை என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார். இதோடு அவருக்கு பணி தீரவில்லை. இன்றைக்கு அவரை நாடு எதிர்பார்க்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. அவரை அகில இந்தியா நோக்குகிறது.

அன்றைக்கு உங்கள் (மு.க.ஸ்டாலின்) தந்தை (கருணாநிதி) இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றினார். இன்றைக்கு நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். உங்களால் தான் முடியும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. நீங்கள் கருணாநிதியின் மகன். உங்களுக்கு அந்த வல்லமை, திராணி, தைரியம் உண்டு என்று நாடு கருதுகிறது.

நீங்கள் தி.மு.க.வை காப்பாற்றி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வந்து இருக்கிறது. இதற்கு அடையாளமாக தான் பல திசைகளில் இருந்து தலைவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலின் அவர்களே, எனது அரசியல் அனுபவத்தின் மூலம் சொல்கிறேன். இந்திய நாடு ஒரு நாள் இந்த கோபாலபுரம் இல்லத்துக்கு நுழைந்து உங்களை பார்த்து நீங்கள்தான் நாட்டுக்கு தலைமை தாங்க வேண்டும் (பிரதமர் பதவி) என்று சொல்லும் காலம் வரும்… வரும்… வரும்…

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.