Tamilசெய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 70வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் – திமுக தொண்டர்கள் வாழ்த்து

தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி அவர் தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார்.

காலையில் வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மூத்த சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. மற்றும் குடும்பத்தினரும் வந்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தி வணங்கினார். அவரை பார்த்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்றனர். இதன் பிறகு தொண்டர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவரை மூத்த அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள் திரளாக கூடி நின்று வரவேற்றனர்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் அரங்க வளாகத்தில் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார். பின்னர் கலைஞர் அரங்கினுள் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.

அங்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து சொல்வதற்காக திரளாக நிற்பதை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பார்த்து கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் தொண்டர்களை சந்திப்பதற்காக மேடைக்கு சென்றார். அப்போது மேடையில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு ‘கேக்’ கொண்டு வந்து வைத்தார். அமைச்சர்கள், தொண்டர்கள் முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த ‘கேக்’கை வெட்டினார்.

இதன் பிறகு தலைமைக் கழக நிர்வாகிகளான அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் சால்வை அணிவித்து மரக்கன்று புத்தகங்கள் வழங்கினார்கள்.

பின்னர் அங்கு திரண்டிருந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரிசையாக வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து சால்வை வழங்கினார்.

இதேபோல் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, முன்னாள் தூத்துக்குடி எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி, படப்பை மனோகரன் ஆகியோரும் புத்தகங்கள் வழங்கி வாழ்த்து கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். முதலமைச்சருக்கு வாழ்த்து சொல்ல வந்த கட்சி நிர்வாகிகள் புத்தகங்கள் சால்வை, பொன்னாடை, பழங்கள், மரக்கன்றுகள், ரூபாய் நோட்டு மாலைகள் போன்ற பல்வேறு வகையான பரிசு பொருட்களை வழங்கினார்கள். நரிக்குறவ பெண்கள் 30 பேர் தயாளு அம்மாள் போட்டோவுடன் வந்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சேகர்பாபு, டி.ஆர்.பாலு எம்.பி., ஆ.ராசா மற்றும் மூத்த அமைச்சர்கள் பலர் மேடையில் நின்று வாழ்த்து சொல்ல வந்த கட்சி தொண்டர்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பிய வண்ணம் இருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் வரும் போது அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அவர்களுடன் சேர்ந்து வந்து முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி பிரமுகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒட்டகம் பரிசளித்து வாழ்த்து கூறினார். பிறந்த நாள் வாழ்த்து கூற வந்த கட்சி நிர்வாகிகள் பலர் மரக்கன்று வழங்கியதால் அவற்றை வாழ்த்து பெறும் கட்சி பிரமுகர்களுக்கு முதலமைச்சர் பரிசாக வழங்கினார்.

நடிகர் நாசர் நேரில் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல ஏராளமானோர் அறிவாலயம் வந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தொண்டர்கள் பார்ப்பதற்கு வசதியாக அங்கு எல்.இ.டி. ஸ்கிரீன் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.