டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம் ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த குற்றப் பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகரராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 23-ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை முதலே சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பிறகு மாலையில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சி.பி.ஐ. இன்று கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் (மார்ச் 4 வரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.