Tamilவிளையாட்டு

நாக்பூர் மைதானத்தை பயிற்சிக்கு கொடுக்காததால் ஏமாற்றம் – பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ரன்னிலும் 2-வது இன்னிங்சில் 91 ரன்னிலும் சுருண்டது. இதனால் போட்டி 3-வது நாளிலேயே முடிந்து விட்டது. இதையடுத்து 2-வது டெஸ்டில் பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்ட் புதிய திட்டத்தை போட்டார்.

நாக்பூர் மைதானத்தில் 3 தினங்களில் போட்டி முடிந்ததால் அந்த ஆடுகளத்தை 2 நாட்களுக்கு பயிற்சிக்காக கொடுக்குமாறு விதர்பாமைதான நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இதே போன்ற பிட்ச் தான் மற்ற டெஸ்ட்களிலும் இருக்கும் என்பதால் அங்கு பேட்டிங் பயிற்சி கொடுக்க விரும்பினார்.

மைதானம் கொடுக்கப்படும் என்று நம்பி ஓட்டல் அறைக்கு சென்று விட்டு பார்த்த போது ஆஸ்திரேலிய வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆடுகளம் முழுவதும் தண்ணீரை விட்டு ஊழியர்கள் மாற்றி அமைத்தனர். ஒரு போட்டி முடிந்த பிறகு பிட்சில் தண்ணீர் விடுவது சகஜமானது. ஆனால் ஆஸ்திரேலியா கோரிக்கை வைத்த பிறகும் பிட்சை கொடுக்காமல் தண்ணீர் விட்டு மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தநிலையில் நாக்பூர் மைதானத்தில் பயிற்சிக்கு அனுமதிக்காததால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீது ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயன் ஹீலி கடுமையாக பாய்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாக்பூர் ஆடுகளம் பயிற்சிக்காக தேவை என ஆஸ்திரேலிய கோரிக்கை வைத்த பிறகும் இப்படி செய்தது சங்கடத்தை அளிக்கிறது. இந்த செயல் கொடூரமானது. இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஹீலி கூறி உள்ளார்.