Tamilசெய்திகள்

கச்சா எண்ணேய் மீதான லாபம் வரி அதிகரிப்பு

ஓ.என்.ஜி.சி. போன்ற நிறுவனங்கள் உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கின்றன. இத்தகைய உள்நாட்டு கச்சா எண்ணெயை வைத்து லாபம் ஈட்டுவதற்கு வரி விதிக்கும் முறையை கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி மத்திய அரசு தொடங்கியது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு தடவை வரி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதுபோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி வரியும் 15 நாட்களுக்கு ஒருதடவை மாற்றி அமைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்ததால், கடந்த மாதம் 17-ந் தேதி இந்த வரிகள் குறைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், சர்வதேச சந்தையில் விலை அதிகரித்ததால், தற்போது வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான லாப வரி டன்னுக்கு ரூ.1,900-ல் இருந்து டன்னுக்கு ரூ.5 ஆயிரத்து 50 ஆக உயர்த்தப்பட்டது.

அதுபோல், டீசல் மீதான ஏற்றுமதி வரி, லிட்டருக்கு ரூ.5-ல் இருந்து ரூ.7.50 ஆக உயர்ந்தது. விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி, லிட்டருக்கு ரூ.3.50-ல் இருந்து ரூ.6 ஆக அதிகரித்தது. இந்த வரி உயர்வு கடந்த 4-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. ரிலையன்ஸ், நயரா எனெர்ஜி ஆகிய தனியார் நிறுவனங்கள், டீசல் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன.