ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இன்று சென்னை வருகை
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. இன்றுடன் நியூசிலாந்து தொடர் முடிவடைகிறது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ‘ஒயிட் வாஷ்’ செய்தது.
மூன்று 20 ஓவர் போட்டியில் இதுவரை நடந்த 2 ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. அடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது. 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இன்று இந்தியா வருகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி வீரர்கள் பெங்களூர் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அணியின் வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாட வில்லை. டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:- கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் சுமித் (துணை கேப்டன்), டேவிட் வார்னர், லபுஷேன், உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஹாசல்வுட், ஆஸ்டன் ஆகர், ஸ்காட் போலண்ட், டிரெவிஸ் ஹெட், நாதன் லயன், லான்ஸ் மோரிஸ், மர்பி, ரென்ஷா, ஸ்டார்க், சுவெப்சன்.