Tamilசெய்திகள்

அண்ணாமலை மிரட்டி பார்க்கும் அளவுக்கு அமைச்சர் எ.வ.வேலு செயல் திறன் இல்லாதவரா?- கே.எஸ்.அழகிரி கேள்வி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதற்காக சென்னையில் இருந்து ஈரோடு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்களுக்கு எதிரிகள் இல்லை. எனவே இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்புழக்கம் என்று பா.ஜனதா ஓலமிடுகிறது. அண்ணாமலையோ ஏதோ ரகசியத்தை கண்டுபிடித்து விட்டதை போல் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சவால் விடுகிறார்.

அடுத்தவர் மீது குற்றம் காட்டுவதற்கு முன்பு தான் செய்த குற்றங்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். கோவாவில் என்ன நடந்தது? வடகிழக்கு மாநிலங்களில் என்ன நடந்தது. மகாராஷ்டிராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எப்படி வீழ்த்தினீர்கள். அவை எல்லாமே பணத்தின் மூலமாகத் தானே நடத்தப்பட்டது. ஒரு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று விவாதித்து இருப்பார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? முதலில் மகாராஷ்டிராவிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் என்ன நடந்தது என்பதற்கு பதில் சொல்லி விட்டு ஈரோட்டுக்கு வரட்டும்.

அண்ணாமலை மிரட்டி பார்க்கும் அளவுக்கு அமைச்சர் எ.வ.வேலு செயல் திறன் இல்லாதவரா? ஒரு இடைத்தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைக்க அவருக்கு தெரியாதா? தேர்தலை நேரில் சந்திக்க தகுதி இல்லாதவர்களுக்கு எதை பற்றியும் பேச அருகதை இல்லை. பிரதமர் மோடியை பற்றி ஆதாரங்களுடன் ஒரு வீடியோ ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. அதற்கு இன்னும் மோடியோ, பா.ஜனதாவோ எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார்கள். புகார் கூறப்பட்டு இருப்பது பிரதமரை பற்றி. எனவே மத்திய அரசோ, மோடியோ இதற்கு பதில் சொல்ல வேண்டியது அவர்களது கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.