அமெரிக்காவில் நடந்த சீன புத்தாண்டு கொண்டாட்ட துப்பாகி சூடு சம்பவம் – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
சீன நாட்காட்டியின்படி நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஹூ கேன் திரான் (72) என்ற முதியவர் என தெரிய வந்தது. வேன் ஒன்றில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்ததும் திரான் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.