Tamilசெய்திகள்

10ம் வகுப்பு மாதிரி வினாத்தாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி கேள்வி – விளக்கம் கேட்கும் மத்திய அரசு

மேற்கு வங்காளத்தில் வங்காள மொழி வழியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில், இந்திய வரைபடத்தில் ‘ஆசாத் காஷ்மீரை’ குறிக்கவும் என்று கேட்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அந்நாட்டு அரசு இவ்வாறு குறிப்பிடுகிறது.

இதுதொடர்பான படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த கேள்விக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இது தவறுதலாக ஏற்பட்டதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

இந்நிலையில், இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள மத்திய கல்வி அமைச்சகம், இது தொடர்பான விளக்க அறிக்கையுடன், இவ்விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கும்படி மேற்கு வங்காள கல்வித்துறையை கேட்டுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.