ரிஷப் பண்டுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த 30-ந் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றபோது அவரது கார் விபத்துக்குள்ளானது. டெல்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலையின் மத்தியில் உள்ள தடுப்பு கம்பியில் கார் மோதி தீப்பிடித்து எரிந்தது.
இதில் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் உயிர் தப்பினார். முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. கால் முட்டு மற்றும் கணுக்காலில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தசை நார் கிழிந்திருந்தது. குறிப்பாக, முழங்காலில் ஏற்பட்டு இருக்கும் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்தது.
எனவே பாதிப்பின் தன்மையை அறிந்து அதற்கு தகுந்த உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக, அவர் டேராடூனில் இருந்து மருத்துவ வசதியுடன் கூடிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
தசைநார் கிழிந்துள்ள முழங்கால் பகுதியில் நேற்று வெற்றிகரமாக ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். மேற்கொண்டு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை மற்றும் நடைமுறைகள் குறித்து டாக்டர் டின்ஷா பர்திவாலா ஆலோசனை வழங்குவார்.
மேலும் பிசிசிஐ விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவக் குழுவும் தொடர்ந்து ஆலோசனை வழங்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரிஷப் பண்ட், அறுவை சிகிச்சைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி போட்டிகளில் பங்கேற்க கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகலாம் என தெரிகிறது.